Photo : Kostas Kastrinakis
சிவன்முடி ஏறினாய்; செப்புகிறார் மண்ணுள்;
எவன்உனை ஏவினான்உன் இந்தியாநீர் துன்பத்துள்;
சங்குடையோன் தங்கையே தாங்கட்டும்(ஈசனை)நீஇறங்கி...
கங்கையே! காவிரிக்கு வா!
கங்கையே! காவிரிக்கு வா!
ஆரரவோன் செஞ்சடையுள் ஆசையுடன் நீவசிக்க
சீரரவாய் பார்வதிஏன் சீறிடாள்? - தாரமவள்,
பொங்குசிவன் மோகமதைப் போக்கட்டும் நீயிறங்கி...
கங்கையே! காவிரிக்கு வா!
அளிசூழ் வனமோ! ஆரரவோன் சடையுள்
நெளியாதே ஏச நிலமே! ஒளிபிறையோன்...
மங்கையுடன் ஆடிடும் மாமனடி - நீயிறங்கி
கங்கையே! காவிரிக்கு வா!
போதுமடி ஊர்உன்னைப் போற்றிடுமோ? தூற்றிடுமே!
ஓதுசிவன் செஞ்சடையோ(டு) ஒட்டாதே! - மாதவனின்
தங்கை சினந்திடுமுன்; தண்ணீர் குறைதீர...
கங்கையே! காவிரிக்கு வா!
மண்ணைக் குடைந்தவன்மேல் மால்கொண்டு, இணைந்துதரை
மண்ணைச் சுமந்தவனை மாலையிட்ட பெண்ணவளே
பங்கன் மனைவியடி பண்புடனே நீயிறங்கி
கங்கையே! காவிரிக்கு வா!
கொட்டும் பனியுள் குதித்துவரும் கங்கையினை
தொட்டும் அலைஒலியில் தூங்காநம் காவிரியை
பட்டுநுரைப் பொங்க பவானிவரக் காண்பதற்கு
சிட்டே சிறகு விரி!
No comments:
Post a Comment